ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!

ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!

நீங்கள் ஒரு புது இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறீர்கள். அது பரவலாக பாராட்டப்படுகிறது. ஆனால், அந்த இயந்திரத்தின் சந்தை எப்படி இருக்குமென்று தெரியாது. நீங்களும் அதை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் நிலையிலும் இல்லை. அப்போது, உலகின் பெரிய நிறுவனம் ஒன்று உங்களை அணுகி, ‘உங்கள் கண்டுபிடிப்பை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். அதை உலகம் முழுவதும் நாங்கள் சந்தைப்படுத்துகிறோம். அதற்கு சன்மானமாக ரூபாய் 200 கோடி பணமும் தருகிறோம்’ என்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்…? நம்மில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் இதையொரு வாய்ப்பாக கருதி ஒத்துக்கொள்வோம்தானே… ஆனால், 14 வயதே ஆன சிறுவன், தீர்க்கமாக அதை ஏற்க மறுக்கிறான்.

டெய்லோர் ரோசந்தல். அமெரிக்காவில், அலபாமா என்னும் ஊரில் உள்ள ஒபிலிகா பள்ளியில் எட்டாவது படிக்கும் சிறுவன். அடிபந்தாட்டம் (பேஸ்பால்) விளையாட்டின் தீவிரக் காதலனும் கூட. அலபாமாவில் எங்கு பேஸ்பால் விளையாட்டுப் போட்டி நடந்தாலும் சென்றுவிடுவான். அது, சிறுவர்கள் விளையாடும் சிறு பந்தயமாக இருந்தாலும் சரி. அப்போது அவன் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம் ஒரு புது கண்டுப்பிடிப்பிற்கு காரணமாக அமைகிறது.

சிராய்ப்பும், புது கண்டுபிடிப்பும்:

மைதானத்தில் விளையாடும் சிறுவர்களுக்கு அவ்வப்போது சிறு காயங்கள் ஏற்படுகின்றன. சிறுவர்களின் பெற்றோர்கள், காயங்களுக்கான முதல் உதவி மருத்துவப் பொருட்களை வாங்க, மருந்தகத்திற்கு விரைகிறார்கள். இதை பார்த்த டெய்லோருக்கு, ஒரு யோசனை வருகிறது. ‘ஏன்.. பணம் செலுத்தினால், தானே முதலுதவி மருந்துகளை தரும் ஒரு இயந்திரத்தை வடிவமைக்கூடாது…?’ என்று யோசிக்கிறான் (அதாவது, ATM போல, நாம் பணத்தை செலுத்தினால், அது முதலுதவி மருத்துகளை வழங்கும்). இந்த யோசனையை அவன் பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் சொல்கிறான். அந்த போட்டியில் அவன் முதல் பரிசை வெல்கிறான்.

இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் ரெக்மெட் (RECMED) என்னும் நிறுவனத்தை துவங்கி, அந்த யோசனைக்கு உருக்கொடுத்து, இயந்திரத்தை உண்டாக்குகிறான்.

டெய்லோருக்கு இந்த யோசனை வருவதற்கு இன்னொரு முக்கியக் காரணம், அவன் பெற்றோர்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். இந்தக் கண்டுப்பிடிப்பில் அவர்களது பங்களிப்பும் இருக்கிறது என்கிறான் டெய்லோர். இந்தக் கண்டுப்பிடிப்பிற்கு காப்புரிமையும் வாங்கிவிட்டான்.

இவனது கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ‘ரவுண்ட் அப் ஸ்டார்ட் அப் ஸ்பேஸ்’ என்ற – புது கண்டுபிடிப்பாளர்களுக்கு இடமும், பயிற்சியும் அளிக்கும் ஒரு நிறுவனம், டெய்லோருக்கு பயிற்சி அளிக்கிறது. அங்கு டெய்லோருக்கு பயிற்சி அளித்த கைல் சேண்ட்லர், “நாங்கள் கிறிஸ்துமஸ் அன்று, டெய்லோரை வீட்டிற்கு செல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினோம். ஆனால், அவன் போன வேகத்தில் திரும்ப வந்துவிட்டான். அவன் மனது முழுவதும் அவன் கண்டுப்பிடிப்பின் மேல்தான். அது மட்டுமல்ல, அவன் ஒன்று பள்ளியில் இருப்பான் அல்லது பேஸ்பால் விளையாடிக் கொண்டிருப்பான். இல்லையென்றால், அவன் புது கண்டுப்பிடிப்புகளில் மூழ்கி இருப்பான்.” என்கிறார்.

டெய்லோரின் இந்த அர்ப்பணிப்புதான், அவனுக்கு கடந்த ஜனவரி மாதம் லாஸ் வேகாஸில் நடைபெற்ற புது கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில், இரண்டாவது பரிசைப் பெறவும் காரணமாக அமைந்தது.

டெய்லோரின் இந்தக் கண்டுபிடிப்பை, அமெரிக்காவின் பெரிய மருத்துவ நிறுவனம் 200 கோடி டாலர்கள் கொடுத்து கைப்பற்றப் பார்த்தது. ஆனால், இதற்கு டெய்லோர் ஒத்துக் கொள்வதாக இல்லை. “என் கண்டுப்பிடிப்பு மக்களிடம் எப்படி வரவேற்பை பெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளாமல், அதை விற்க தயாராக இல்லை…” என்று சொல்லி மறுத்துவிட்டான்.

அடுத்த பில்கேட்ஸ்:

அதே வேளையில் டெய்லோரின் சொந்த ரெக்மெட் நிறுவனம், இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைப் பெற்று இருக்கிறது. ஓர் இயந்திரத்தின் விலை 5,550 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது.

டெய்லோர், “கேளிக்கை பூங்காக்கள்தான் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் என்று நம்புகிறோம். அங்கு விளையாடும் குழந்தைகளுக்குதான் அவ்வப்போது சிறு காயம் ஏற்படுகிறது… பேண்ட் எய்ட், பிளாஸ்திரி இல்லாமல் மிகவும் தடுமாறுகிறார்கள்..” என்கிறான்.

டெய்லோரின் கணிப்பு தப்பவில்லை. ஆம், அமெரிக்காவில் பிரபல கேளிக்கை பூங்கா, 100 இயந்திரங்களுக்கான முன்தொகையை செலுத்தி உள்ளது.

இங்கு சிலருக்கு புது தொழிற்நுட்பங்களை கண்டுபிடிக்க தெரியும். ஆனால், அதைக் கொண்டு சம்பாதிக்க தெரியாது. இந்த விஷயத்தில் 14 வயதே ஆன டெய்லோரின் புத்திசாலித்தனத்தைக் கண்டு, அமெரிக்க மக்கள், ‘ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்’ என்று கொண்டாடுகிறார்கள்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News