ரொட் லேவர் அரினா டென்னிஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (27) 5 செட்கள் வரை நீடித்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையருக்கான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ்வை 3 – 2 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட டெனில் மெத்வடேவ், 6ஆவது தடவையாக க்ராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றார்.
யூக்ரெய்னை ரஷ்யாவும் பெலாருஷியாவும் ஆக்கிரமித்ததால் அந்த இரண்டு நாடுகளுக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் அந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் நடுநிலையாளர்களாக பங்குபற்றுகின்றனர்.
அதன் படி ரஷ்யரான டெனில் மெத்வடேவ் நடுநிலையாராக இந்தப் போட்டியில் பங்குபற்றிவருகிறார்.
ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த இரண்டாவது அரை இறுதிப் போட்டி 4 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் நீடித்தது.
இந்தப் போட்டியின் முதலாவது செட்டில் இருவரும் சம அளவில் மோதிக்கொள்ள இறுதியில் ஸ்வரெவ் 7 – 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இரண்டாவது செட்டில் திறமையாக விளையாடிய ஸ்வரெவ் 6 – 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் மீண்டும் வெற்றிபெற்று 2 செட்களால் முன்னிலையில் இருந்தார்.
ஆனால், மூன்றாவது செட் கடும் போட்டித்தன்மையைத் தோற்றுவித்தது.
இருவரும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றதால் அந்த செட் சமநிலை முறிப்புவரை நீடித்தது.
இறுதியில் டெனில் மெத்வடேவ் 7 (7) – 8 (4) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார்.
மூன்றவாது செட்டைப் போன்றே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நான்காவது செட்டிலும் சமநிலை முறிப்பு முறைமையில் 7 (7) – 6 (5) என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற மெத்வடேவ், செட்கள் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.
தீர்மானம் மிக்க 5ஆவது செட்டில் ஸ்வரெவ் சற்று தடுமாற்றத்திற்கு உள்ளானார். இதனை சாதகமாக்கிக்கொண்ட மெத்வடேவ் 6 – 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜனிக் சின்னரை மெத்வடேவ் எதிர்த்தாடுவார்.