எமது தாய் தமிழக உறவுகளுக்காக கனடாவில் இடம்பெற்ற கண்டன கூட்டம்
தமிழீழ விடுதலை வரலாற்றில் தமிழக மக்களின் பங்களிப்பும் ஈகமும் ஒப்பற்றவையாக போற்றப்பட வேண்டியவை. காலம் காலமாக ஈழத்தமிழர்கள் துயரில் தமிழக உறவுகள் தாய்மை உணர்வோடு பங்கேற்று துயர் துடைக்க உயிரையும் கொடுத்து போராடி வந்துள்ளார்கள். அந்த வகையில் காவிரி நதி நீர் சிக்கலில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் தேசிய மாந்தர்களாக வாழும் ஈழத்தமிழர்களின் குரல் கொடுப்பும் வரலாற்று கடமையாக எம் முன் உள்ளமையை கனடிய தமிழர்களின் தேசிய கட்டமைப்பாக திகழும் கனடிய தமிழர் தேசிய அவையினராகிய (NCCT) நாம் உணர்கின்றோம்.
காவிரி நதி நீர் சிக்கல் விவகாரத்தில் கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தமிழக தமிழ் மக்கள் தாக்கப்படுவதும், தமிழர்களின் பல கோடி ரூபா சொத்துக்கள் எரிக்கப்படுவதும், தமிழர்களை நிர்வாணமாக்கி அடிப்பதும், முதியவர் என்றும் பாராமல் தாக்குவது போன்ற பல வேதனை தரும் வன்முறை செயல்கள்களை கர்நாடகாவில் இருக்கும் சில இன வெறியர்கள் கையில் எடுத்திருப்பதும் கண்டனத்திற்குரிய மனிதாபிமானமற்ற குற்றச் செயல்களாகும்.
இவ்வாறாக கர்நாடாகாவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அனைத்து மனித உரிமை மீறல்களையும் கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) வன்மையாக கண்டிப்பதோடு இந்நாட்களில் அல்லல் படும் கர்நாடகா வாழ் தமிழர்களின் துயரிலும் பங்கேற்கிறது.
Danube ஜெர்மனியில் ஆரம்பித்து 10 நாடுகளான Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Romania, Bulgaria, Moldova, Ukraine ஊடாக பயணித்து கருங்கடலில் சங்கமிக்கின்றது. நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. சீனாவில் நதி நீர் இணைப்பு திட்டமூடாக வெற்றி கண்டுள்ளார்கள்; இத்தகைய நதி நீர் சிக்கலுக்கு; இந்தியா பாகிஸ்தான் போன்ற பல நாடுகளே நதிகளை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்களோடு புரிதல்களோடு பயன் பெற்று வருகின்றன
நதி நீர் தோன்றும் மலைகளுக்கும் இடங்களுக்கும் மட்டும் சொந்தமானவை அல்ல. அவை கடலில் கலக்கும் கழி முகங்களும் சொந்தமானவை. பல ஆயிரம் ஆண்டு காலமாக தஞ்சை மக்கள் காவிரி நதியில் விவசாயம் செய்து வந்தவர்கள். 1932 இல் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டிய பின் தான் இந்த நதி நீர் சிக்கல் காவிரி குறித்து உருவானது. எனவே இயற்கையில் நதி எங்கு எப்படி பாய்ந்து கடலில் சேர்கின்றதோ அந்த அந்த பகுதிகளுக்கு எல்லாம் அந்த நதி நீர் சொந்தமே. அதை பகிர மாட்டோம் என சொல்வது அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.
உலகில் பல தேசங்கள் நதிகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது ஒரே நாட்டில் இந்திய குடியாண்மைக்குள் வாழும் இரு மாநிலங்கள் இப்படி காவிரி நீரை தரமாட்டோம் என நீர் கேட்கும் தமிழ் மக்களை தாக்கி வன்முறையை கட்டவிழ்ப்பதும் மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத குற்றங்களாகும்.
அந்த வகையில் அன்னை தமிழகத்தின் உள்ளங்களை கொந்தளிக்க செய்திருக்கும் இந்த அனர்த்தங்களை கனடா வாழ் தமிழ் மக்களும் கண்டிக்கிறார்கள் என்ற உணர்வலைகளை வெளிப்படுத்தி எங்கள் உறவுகளுக்கு உணர்வு ரீதியாக நாமும் குரல் கொடுத்து எமது கண்டனத்தை வெளிப்படுத்திய கண்டன கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
எங்களுக்காக குரல் கொடுத்து உயிர் கொடுத்த தமிழகத்திற்கு நாம் என்றென்றும் குரல் கொடுக்கும் நன்றி மறவாத தமிழர்களாக இருப்போம் என்பதை கனடா வாழ் தமிழ் மக்களின் உணர்வலைகளோடு கனடிய தமிழர் தேசிய அவையினராகிய (NCCT) நாம் உறுதியாக எம் உறவுகளுக்கு கூறி கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை – NCCT
தொலைபேசி: 416.830.7703 | மின்னஞ்சல்: [email protected]