உள்நாட்டுப் போர் தீவிரமடைகிறது: தெற்கு சூடானில் 300 பேர் பலி- இந்தியர்கள் பரிதவிப்பு
தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் ஜூபாவில் நடந்து வரும் கடும் சண்டையில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூபா நகரில் 300 இந்தியர்கள் போர்முனையில் சிக்கியுள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டில் சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிந்து தனிநாடானது. அந்த நாட்டில் திங்கா, நூர் இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அதிபர் சல்வா கீர், திங்கா இனத்தைச் சேர்ந்தவர். துணை அதிபர் ரெய்க் மாசர், நூர் இனத்தைச் சேர்ந்தவர்.
தெற்கு சூடான் தனிநாடானது முதல் அதிபரும் துணை அதிபரும் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2013-ல் துணை அதிபர் ரெய்க் மாசரை அதிபர் சல்வா கீர் பதவிநீக்கம் செய்தார்.இதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் வெடித்தது. கடந்த 3 ஆண்டுகளாக இருதரப்பினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஐ.நா. சபையின் சமரசத்தின்பேரில் கடந்த ஏப்ரலில் கூட்டாட்சி ஏற்படுத்தப்பட்டது. துணை அதிபர் ரெய்க் மாச்சர் மீண்டும் பதவியேற்று ஆட்சியில் இணைந்தார். ஆனால் 4 மாதங்களில் அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.
கடந்த 8-ம் தேதி முதல் தலைநகர் ஜூபாவில் அதிபர், துணை அதிபரின் ஆதரவாளர்கள் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருதரப்பினரும் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. சமரச முயற்சியில் ஈடுபட்ட ஐ.நா. தூதர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்தியர்கள் நிலை?
ஜூபா நகரில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். போர் முனையில் சிக்கியுள்ள அவர்களை இந்தியா அழைத்துவர மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு சூடானில் நடைபெறும் சண்டை கவலையளிக்கிறது. போர் முனை யில் பரிதவிக்கும் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுகலாம். இப்போதைக்கு இந்தியர்கள் யாரும் தெற்கு சூடானுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.