இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்ல பெலவத்த ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் மீளவும் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இந்த முயற்சியை அரசாங்கம் முறியடிக்க வேண்டும்.
1983ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி எமது நாட்டுக்கு கறுப்பு கறை படிந்த தினமாகும்.
உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இந்த சம்பவம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் இடம்பெற்று 34 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டின் ஆட்சியாளர்கள் பாடங்களைக் கற்றுக் கொண்டு, பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கங்கள் உரிய முனைப்பு காட்டவில்லை.
34 ஆண்டுகளுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 13 படையினர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த படையினர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனினும் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களின் சடலங்கள் அனைத்தையும் கொழும்பிற்கு கொண்டு வந்து பெரிய மரண வீடாக மாற்றியிருந்தது.
அதன் பின்னர் இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் தடிகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கே இந்த சம்பவங்கள் இடம்பெற்றன. வேண்டுமென்றே இனவாதம் விதைக்கப்பட்டது.
அதன் பின்னர் தமிழ் சிங்கள இனவாதம் வேகமாக வியாபித்து வளர்ந்தது.
போர் காரணமாக நாட்டுக்கு பாரியளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. நாட்டுக்கு பயனுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிவடைந்தன.
சோசலிச இளைஞர் சங்கம் ஜூலை 23ம் திகதியை சகோரத்துவ தினமாக அனுட்டிக்கின்றது. இந்த நிகழ்வில் அனைவரும் இணைந்து கொள்ள முடியும் என எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.