அரசியல் அமைப்பே தெரியாத அரச தலை வர் இனியும் அந்த அதிகாரத்தில் இருக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். இந்த அரசுக்கு முதுகெலும்புள்ள தெனில் அரசியல் அமைப்பை மீறி அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட அனைவரையும் தண்டித்துக் காட்டட்டும் என மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் நேற்று சவால் விடுத்தது.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இரசாயான ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘அமெரிக்க பாதுகாப்பு படையினர் இலங்கையில் நினைத்த நேரத்தில் தமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்த தடைகளும் இன்றி அனுமதி வழங்கியது அப்போதைய இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே. அமெரிக்க பிரஜையான அவரும் அப்போதைய அமெரிக்கவின் இலங்கை தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் இருவரும் செய்துகொண்ட ‘ஹக்ஸா’ உடன்படிக்கை மூலமாகவே இதனை செய்தனர்.
அன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தவர்கள் வாய் மூடிக் கொண்டு இருந்துவிட்டு இப்போது உடன்படிக்கை குறித்து வாய்கிழியப் பேசுகின்றனர். தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் நேரத்துக்கு நேரம் மாறுகின்றனர். தேசப்பற்றாளர் என்றால் எந்த நேரமும் ஒரே கொள்கையில் இருக்க வேண்டும், காலத்துக்கு காலம் மாறக்கூடாது. பன்னாட்டுச் சமூகத்திடம் இருந்து வரும் இரசாயான ஆயுதங்கள் குறித்து பேசுகின்றனர் ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் மிகவும் மோசமான இரசாயான ஆயுதம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதுதான் நிறைவேற்று அதிகாரம். கடந்த நாற்பது ஆண்டுகாலமாக இருந்துவரும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவே மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டு அரச தலைவராக்கப்பட்டார். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டன.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாகக் கூறிய போதிலும் இப்போதும் அவர் நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றவே முயற்சித்து வருகின்றார். அதற்காக அவரை கொலை செய்வதாக கூறிய அணியுடனையே அவர் கூட்டணியையும் அமைத்துக்கொண்டுள்ளார். அவருடன் இருக்கும் சூழ்ச்சி கும்பல்தான் இவை அனைத்துக்குமே காரணமாகும்.
அரசமைப்பு தெரியாத அரச தலைவர் ஒருவரை தொடர்ந்தும் அந்த அதிகாரத்தில் வைத்துகொள்ள வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அமைப்பு மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆகவே அரசியல் அமைப்பினை மீறி அரசியல் சூழ்ச்சி செய்த அனைவரையும் அரசு தண்டிக்க வேண்டும். முதுகெலும்புள்ள அரசு என்றால் முதலில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் -– என்று அவர் மேலும் தெரிவித்தார்.