
வைபவ் – வாணி போஜன்
வைபவ்க்கு காமெடி நல்லா வரும். வெங்கட் பிரபு படங்களிலெல்லாம் அவருடைய இடங்கள் பளிச்செனத் தெரியும். ’அழகிய தீயே’, ‘மொழி’, ‘அபியும் நானும்’ என மனித உணர்வுகளை மென்மையாகச் சொல்லி மனதை வருடிய படங்களைத் தந்தவர் ராதாமோகன். மீண்டும் ஒரு மெல்லிய நகைச்சுவை நல்லுணர்வுத் திரைப்படத்துடன் காத்திருக்கிறார்.
“உணர்வுகளைச் சொல்லும்போதுகூட நகைச்சுவையைத்தான் துணைக்கு அழைப்பேன். இப்ப இருக்கிற கோவிட் நிலைமைக்கு சீரியஸ் படம் பார்க்கிற மனநிலை இல்லை. நான் மட்டுமில்லை, இப்ப அநேகம் பேர் இந்த நிலைமையில்தான் இருக்காங்க. படத்தோட பெயர் ‘மலேசியா டூ அம்னீஷியா.’ சொன்னதும் ஒரு ஹாலிடே உற்சாகம் மாதிரி உள்ளுக்குள்ளே உதைக்குதில்லே… அதுதான் படத்தோட பக்கா பேக்கேஜ். உண்மையிலேயே முழுநீள காமெடி. ‘கடைசியா எந்த இடத்தில் சிரிச்சோம்’னு மறந்து போகிற அளவுக்கு உங்களைச் சிரிக்க வச்சுக்கிட்டே இருக்கும் படம்.
விடியற்காலையில் பூங்காக்களில் பார்த்தா பெரும் கூட்டமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து சிரிப்பு தெரபி பண்றாங்க. ‘அடடா… இப்ப ஜனங்க சிரிக்கிறது அரிதா போச்சோ’ன்னு உறைச்சது. இந்தப் படத்தில் எல்லாத்தையும் நகைச்சுவை சேர்த்தே சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அப்படித்தான் ‘மலேசியா டூ அம்னீஷியா’ இருக்கும்” எளிமையாகப் பேசுகிறார் இயக்குநர் ராதா மோகன்.
“சத்தம் காட்டாமல் ஒரு படம் ஆரம்பிச்சு முடிச்சிருக்கீங்க…’’
“இது ஓ.டி.டி-க்கான படம். Zee5 வெளியிடுறாங்க. இதுவரை பத்துப் படங்களுக்கு மேல் செய்திட்டேன். பொழுதுபோக்காகவே இருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்தில் ஒரு படம் உங்களின் இதயத்தில் ஒட்டணும். கொஞ்சம் கவலை மறந்து சிரிக்கணும். அப்படி ஒரு சினிமா பண்ண நினைச்சதுதான் இப்படி வந்திருக்கு. படமே காதலும் காமெடியும் கலந்ததுதான். ஒரு பொய் சொல்லப்போய், அது கொஞ்சம் விபரீதமாகி வேற மாதிரி போகிற நிலைமை. அதை எப்படி சமாளிச்சு வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை. இதற்கான காரணத்தைச் சொன்னால் கதையோட சின்ன முடிச்சு அவிழ்ந்திடும். அதனால் ஸாரி… படம் பார்த்தால் இந்தப் பெயர் வைத்ததற்கான நியாயங்கள் நிச்சயமா புரியும்.”
“இந்த வைபவ் – வாணி போஜன் ஜோடி நல்லாருக்கு…’’
“வைபவ்க்கு காமெடி நல்லா வரும். வெங்கட் பிரபு படங்களிலெல்லாம் அவருடைய இடங்கள் பளிச்செனத் தெரியும். அவரே படத்தைத் தயாரிக்கவும் செய்தார். வாணி நல்லா தமிழ் அறிஞ்ச பொண்ணு. அதுவே இப்ப பெரிய சௌகரியம். இனிமே சினிமான்னு போனா சிரிக்க மட்டும்தான் இப்ப காலம் இருக்குது. என் படத்தில் எப்போதும் இருக்கிற எம்.எஸ். பாஸ்கர் இருக்கார். கதை கேட்க வரும்போதே ‘ஒரே ஒரு சீனாவது அழ வைச்சிடுவீங்களே’ன்னு கேட்டார். ‘இந்தத் தடவை உங்களை அழ வைக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன். கருணாகரன் இந்தப் படத்தில் அருமையான ரோல் செய்திருக்கார். மகேஷ் முத்துசுவாமிதான் கேமரா. பிரேம்ஜி அமரன்தான் மியூசிக். அவர் வாழ்க்கையில் ஜாலியாக இருக்கிற மாதிரி தெரியுமே தவிர இசையில் ரொம்பவே சின்சியர்!”
“உங்க படங்களில் எல்லாமே காமெடி பின்புலமா இருந்தாலும் மெல்லிய உணர்வுகள் துணையாய் இருக்கே?’’
“ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் வந்திருக்கேன். அது என் மூச்சுக் காற்று மாதிரிகூட இருக்கலாம். என்னோட மனிதர்கள் சாதாரணமானவங்கதான். வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் தொட்டுப் பார்க்கணும்னு நினைக்கிறேன். எனக்கு யார் மேலேயும் புகார் கிடையாது. எல்லோரும் அவங்கவங்க நியாயத்தோட போய்க்கிட்டே இருக்கோம். காமெடியில் ஆபாசம் கலந்துவிடாமல் பார்த்துக்குவேன். எல்லாக் கதைகளுமே மனசிலிருந்து வர்றதுதான். அப்போது இருக்கிற கனிவில் வந்து விழுகிற கதைகள் தான். எப்பவும் அவநம்பிக்கையைக் காட்டிடக்கூடாதுன்னு விரும்புவேன். சினிமா எனக்கு அலுக்கவே இல்லை. தெருத்தெருவா அலைஞ்சாலும் திரும்ப நிலைக்கு வர்ற தேர் மாதிரி எங்க போனாலும் சினிமாவுலதான் வந்து நிக்கிறேன். எங்கே பார்த்தாலும் இன்னமும் ‘மொழி’ அருமையா இருந்துச்சு, ‘அபியும் நானும்’ என் பொண்ணுக்குப் பிடிச்ச படம் சார்’னு கையைப் பிடித்துக்கொண்டு சொல்கிறார்கள். வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு நிதானத்தையும் அமைதியையும் நேர்மையையும் இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன்.”