பாடகர் Johnny Hallyday இன் இறுதி அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் இடம்பெற்றது. உடலம் பரிசின் La Madeleine தேவாலயத்துக்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் கலந்துகொண்டிருந்தார்.
பின்னர் பல நூறு உந்துருளி சாரதிகள் தங்கள் உந்துருளியில் ஊர்வலம் வர, உடலம் சோம்ப்ஸ்-எலிசேக்கு கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது, ‘Johnny Hallyday இன்றியமையாத ஒரு தோழன். நண்பனாக, சகோதரனாக ஜோனி உங்கள் எல்லோர் வீட்டிலும் உள்ளார். ஜோனி உங்களுடையவர். அவர் ஒரு போதும் மறையமாட்டார். அவர் இந்த நாட்டின் ஒரு பகுதி!’ என மக்ரோன் மிக உருக்கமாக தெரிவித்தார்.
உடலத்தை தேவாலயத்தில் இருந்து எடுத்துவரும் போது Johnny Hallyday இன் மனைவி Laeticia Hallyday, மற்றும் அவரின் இரு பிள்ளைகளும் பின்னால் நடந்து வந்தனர். தேவாலத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் போது, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து மற்றும் நிக்கோலா சர்கோஷி ஆகியோர் உடனிருந்தனர்.
தேவாலயத்தின் இரு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். செய்தி சேகரிப்பாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி இடம்பெற்ற இடத்தில் குவிந்திருந்தனர். தொடர்ந்து, நாளை மறுதினம் திங்கட்கிழமை பிரெஞ்சு தீவான Saint-Barthélémy இல், Johnny Hallyday இன் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.