பங்களாதேஷுக்கு எதிராக பெனோனி விலோமுவர் பார்க் பி விளையாட்டரங்கில் இன்று (17) திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண (ICC U19 Women T20WC) ஏ குழு போட்டியில் பங்களாதேஷிடம் 10 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
இலங்கை சார்பாக அணித் தலைவி விஷ்மி குணரட்னவும் தெவ்மி விஹங்காவும் அரைச் சதங்கள் குவித்த போதிலும் அவர்களால் இலங்கையின் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.
ஆபியா ப்ரொட்டாஷா, மிஸ்டி ஷஹா ஆகிய இருவரும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
ஆபியா 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைக் குவித்தார். மிஸ்டி 14 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து டிலாரா அக்தர், ஷொர்ணா அக்தர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 51 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷொர்ணா அக்தார் 28 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைக் குவித்தார். அவர் 23 பந்துகளில் ஒற்றைகள், இரட்டைகள் பெற்ற விதம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக மிளிரக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டியது.
டிலாரா அக்தார் 27 பந்துகளில் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை பந்துவீச்சில் ரஷ்மி நேத்ராஞ்சலி 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
166 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நெத்மி சேனாரத்ன (0), சுமுது நிசன்சலா (3) ஆகிய இருவரும் ஆட்டமிழந்ததால் இலங்கை பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.
எனினும், விஷ்மி குணரட்ன, தெவ்மி விஹங்கா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 96 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். தெவ்மி விஹங்கா 44 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைக் குவித்தார்.
கடைசி 20 பந்துகளில் இலங்கையின் வெற்றிக்கு மேலும் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், வெற்றி இலக்கை 10 ஓட்டங்களால் அடைய இலங்கை தவறியது.
மனுதி நாணயக்கார 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன 54 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். துலங்கா திசாநாயக்க ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் மறூபா அக்தர் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் பங்களாதேஷிடம் ஐக்கிய அமெரிக்கா தோல்வி அடைந்தால் இலங்கை 2ஆம் சுற்றில் விளையாட தகுதிபெறும். இலங்கை தனது கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது.