அரச வங்கியொன்றின் காலி பிராந்தியத்தில் உள்ள மூன்று தானியக்க பணப்பறிமாற்று இயந்திரங்களை முடக்கி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய, இரு வெளிநாட்டவர்களை உள்ளடக்கியதாக நம்பப்படும் இந்த கொள்ளைக் கும்பளை அடையாளம் கண்டு கைது செய்யும் பொறுப்பு சி.ஐ.டி. சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம பகுதியில் கடந்த 2022 டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கும் அதிகாலை 3.40 மணிக்கும் இடையே இந்த கொள்ளை இடம்பெற்றிருந்தது.
இதுவரையான விசாரணைகளில், கார் ஒன்றில் வரும் கும்பலில் உள்ளடங்கும் இரு வெளிநாட்டவர்களின் உருவ அமைப்பை ஒத்தவர்கள் இருவர் மட்டும் இறங்கிச் சென்று, சிறிய தொழில் நுட்ப கருவி ஒன்றினை தானியக்க பணப் பரிமாற்று இயந்திரப் பகுதியில் பொருத்தி, கட்டமைப்பை ஹெக் செய்து அதில் உள்ள அனைத்து பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தானியக்க பணப் பறிமாற்று இயந்திரத்தில் பணத் தொகையை பெற முடியாமல் இருப்பது தொடர்பிலும், கட்டமைப்பில் பணம் இயந்திரத்தில் இருப்பதாக காண்பித்த நிலையும், அது தொடர்பில் தேடிப் பார்த்த போதே இக்கொள்ளை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில், மேலதிக விசாரணைகளில், கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலை அதே அரச வங்கியின் நாரஹேன்பிட்டி கிளையிலும் வெளிநாட்டவர்கள் இருவர் என சந்தேகிக்கப்படுவோர் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்தில் கொள்ளையிட முயற்சித்துள்ளமை குறித்தும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் அது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.
காலி சம்பவம் தொடர்பிபில் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், இந்த வெளிநாட்டவர்களை உள்ளடக்கிய கொள்ளை கும்பல் கொள்ளைக்காக வந்த கார், கம்பஹா பகுதியில் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அது வாடகைக்கு வழங்ககப்பட்டிருந்த நிலையில் கொள்ளைக் கும்பலால் பெற்றுக்கொள்ளப்பட்டு இலக்கத் தகடும் மாற்றப்பட்டு கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதனைவிட, அம்பலாங்கொடை பகுதியிலிருந்து அதிவேக பாதை ஊடாக கொள்ளையர்கல் வந்துள்ளமை தொடர்பிலும் முதலில் ஹிக்கடுவை பகுதியில் உள்ள தானிக்க பணப் பரிமாற்று இயந்திரத்தை டிசம்பர் 30 அதிகாலை 1.30 மணிக்கு கொள்ளையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பின்னர், காலி – கராபிட்டிய தானியக்க பணப் பரிமாற்று இயந்திரம் அதிகாலை 3.22 மணிக்கும் அதனை தொடர்ந்து பந்தேகம இயந்திரமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இக்கொள்ளைகளின் போது நேரடியாக தானியக்க பணப் பறிமாற்று இயந்திரங்களுக்குள் நுழையும் இரு வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் நபர்களும் முகத்தை மறைக்கும் முகக் கவசமும் , தொப்பியும் அணிந்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே சி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.