கொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களில் மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும், அவர்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேடி வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தமக்கு அவ்வாறானதொரு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ் பேச்சாளர் ஆகியோர் மறுத்துள்ளனர்.
இராணுவத் தளபதி
“தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்றன. எனவே, அங்கிருந்து எவரும் தப்பிச் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் அனைவரும் சுகாதார முறைமைகளுக்கமைய சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றனர்” என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பொலிஸ் பேச்சாளர்
“தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து மக்கள் எவரும் தப்பிச் சென்றார்கள் என்று இதுவரை எமக்குத் தகவல் கிடைக்கவில்லை. தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குப் பயந்து ஒளிர்ந்து திரிபவர்களைத்தான் முப்படையினருடன் பொலிஸாரும் இணைந்து தேடிக் கண்டுபிடிக்கின்றார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்படுபவர்கள் மத்திய தனிமைப்படுத்தல் நிலையங்களில் 21 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். கொரோனாவை இல்லாதொழிக்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது” எனப் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

