நாடாளுமன்றத் தேர்தல் திகதியை ஆணைக்குழு அறிவித்து விட்டது. இதன் காரணமாக எழும் அரசமைப்பு நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்தின், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கைகளிலேயே உள்ளது.”
– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.
ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 20ஆம் திகதி தீர்மானித்து வர்த்தமானி வெளியிட்டுள்ளது. ஆனாலும் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டிருந்தது. அரசமைப்புக்கு அமைவாக மூன்று மாத காலத்தினுள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதன் பிரகாரம் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும். ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளமையால் புதிய நாடாளுமன்றம் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் கூட முடியாமையால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்று, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
“தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. ஆட்சித் தலைவர்களும், தேர்தல் திகதியை அறிவிக்காமல் ஒத்திவைக்க முடியாது என்று கூறினர். அதற்கு அமைவாக தற்போதுள்ள நிலைமைகளை ஆராய்ந்து ஜூன் 20ஆம் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமாக இருப்பது தொடர்பிலோ இதனால் எழும் அரசமைப்பு நெருக்கடி தொடர்பிலோ ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும். அதனை அவர்தான் தீர்க்க வேண்டும்” – என்று குறிப்பிட்டார்.
இந்த நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிந்த பின்னரும் தேர்தல் வைக்க முடியாத நிலைமை காணப்பட்டால் என்ன செய்வது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அது தொடர்பிலும் நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய முடியும். என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான சட்டங்களை ஆக்க வேண்டியதையும் நாடாளுமன்றம்தான் செய்ய வேண்டும்” – என்றார்.

