கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) தொடர்பில் அரச நிவாரணப் பணிகளில் அரசு சார்பு அரசியல் கட்சியின் தலையீடு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது .
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு 2020 ‘ஏப்ரல்’ 25ம் நாள் குறிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்த் தாக்கத்தினை யாவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பொதுத் தேர்தலும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலுள்ளது.
அதன் காரணமாக நாடு முழுவதும் அவசரகால நிலை அமுல் செய்யப்பட்டு ஊரடங்கு நடைமுறையிலிருப்பதனால் பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள அரசுத் துறை, அரசு சாரா ஊழியர் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோர், சமுர்த்தி பெறுவதற்கு பட்டியலிலுள்ளோர், சமுர்த்தி உதவித்திட்டத்தில் வராதோர், கூலித் தொழிலாளர், தொழில்அற்றோர், வாழ்வாதாரமற்றோர், கடல் தொழிலாளர், விவசாயிகள், மேலும் போரினால் பாதிக்கப்பட்டோர், பலதுறைகளிலும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடனாகவும், நிவாரண உதவியாகவும் ரூ5000/- உதவி வழங்குவதற்கு அரசு அறிவித்தல் கொடுத்துள்ளது.
இப் பணிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுடையவர்கள் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், கடமைப் பொறுப்புள்ள ஏனைய அரசுத்துறைத் தலைவர்கள் மட்டுமே தான்.
ஆனால் ஆளும் கட்சியைச் சார்ந்த ஒரு கட்சியின் வேட்பாளராயுள்ள திரு.இ.அங்கஜன் தனது முகநூலில் தனது அமைப்பாளர்கள், முகவர்களின் பெயர்களையும், அவர்களின் தொலைபேசி இலக்கங்களையும் அறிவித்து அரசு வழங்கும் நிவாரணம், நிதி உதவி என்பனவற்றைப் பெறுவதற்கு பொதுமக்கள் குறிப்பிட்ட தனது முகவர்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இச்செய்திகள் சமூகத் தளங்களிலும், பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.(முகநூல் இணைக்கப்பட்டுள்ளது) இச் செயலானது ஆளுந்தரப்பினதும், வேட்பாளர் திரு.அங்கஜனினதும் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்த எடுத்த நடவடிக்கையேயாகும்.
இந் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தினதும் மாவட்டங்களின் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர்களின் பொறுப்புக்கூற வேண்டிய கடமையாகும்.
கொரோனா வைரஸ் தொற்று நோயினாலும், ஊரடங்கு நடைமுறைகளினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பொறுப்புள்ள அரசுத் துறையினர் யார் என்பதையும் அதற்குரிய வழிகாட்டல்களையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோருகிறோம்.
எங்களது முறைப்பாட்டைத் தேர்தல்கள் ஆணையகத்திற்கு அனுப்புமாறும், இம் முறைப்பாட்டின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் உடன் செயல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
சீ.வீ.கே.சிவஞானம்
மூத்த துணைத்தலைவர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.

