“நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு இதுவரை அரசு வரவில்லை. இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத்தான் இருக்கின்றது.”
– இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களில் மீண்டும் கூட்டலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தபோதும் இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு எம்மால் தேர்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாதுள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். அதற்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது.
இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே ஜனாதிபதியால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்தும் திகதியை ஆணைக்குழுவினர் விரைவில் வெளியிட வேண்டும்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலர் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட விடும் என அழைப்பு விடுக்கின்றனர். ஆனால், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதனை மீண்டும் கூட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை” – என்றார்.

