பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதற்கு கீழுள்ள பதவிகளில் உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமது கடமையில் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தமக்கு ஏற்படவுள்ள உயிராபத்தைக்கூடக் கருத்தில் கொள்ளாமல் கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட, குறித்த பதவிகளில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் 5 ஆயிரம் ரூபா வெகுமதியை வழங்க, பதில் பொலிஸ்மா அதிபரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை வழங்குவதற்கு, மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

