கொரோனா அச்சத்தையடுத்தான ஜனாதிபதியின் முதலாவது பேச்சு, பொறுப்பானதாக அமைந்திருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது என்றும் எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கப்படலாம்.
இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அரசாங்கத்தால் சுயமாக மாத்திரம் செயற்பட முடியாது.
இதற்காக, தேசிய அளவிலாள நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தைத் தவிர்ந்த மற்றைய அரசியல் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டால், இதை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என நம்புகின்றேன்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி தற்போது சிந்திப்பதை விடுத்து, நாட்டு மக்களின் உயிரையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பதே, தற்போதுள்ள முக்கிய தேவையாக உள்ளது.
ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரையாடல், பொறுப்பற்ற தன்மையாகவே காணப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டமை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆகியவற்றை பற்றி மாத்திரம் உரையாடிய அவர், இறுதியில், பருப்பு, டின்மீன்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்தமை, தற்போதுள்ள சூழ்நிலையக்கு உகந்தது இல்லை என்றும் கூறினார்.
இதற்கிடையே பொதுத் தேர்தலின் மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அச்சத்தில் இருக்கும் மக்கள், பாதுகாப்புத் துறையினர், சுகாதாரப் பிரிவினக்கு தைரியம் கொடுக்கவேண்டிய தருணத்தில், தேர்தல் பற்றி உரையாடுவது, பொறுத்தமானதாக இருக்கவில்லை.
டின்மீன்கள் பல வகைகளிலும் பல கிராம், கிலோகிராம் வகைகளிலும் இருக்கும் நிலையில், எந்த டின்மீன் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார் என்பது விளக்கமில்லாமலே உள்ளது.
கொரோனா பாதிப்புக்கான தீர்வாக அன்றி, இது ஒரு பொதுத் தேர்தல் உறுதிமொழியாகவே காணப்படுகின்றது.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன்களை, 6 மாதங்களுக்கு வசூலிக்கவேண்டாம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அப்படியாயின், இந்த 6 மாதத்துக்கான வாடிக்கையாளர்கள் வழங்கும் வட்டித் தொகையை, அரசாங்கம் வங்கிக்கு வழங்குமா’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

