அடக்கி ஆள எடுக்கப்படும் சகல விதமான திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைந்து நின்று பெரும் ஜனநாயக பலத்தோடு எதிர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அறைகூவல் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில் அது தொடர்பாக அவர் வியாழக்கிழமை 05.03.2020 விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சுதந்திரத்திற்கு முன்னரான வேளையிலும் அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும் இலங்கையில் சமூகங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டே வந்துள்ளது.
வெள்ளையர்களும் பிரித்தாண்டார்கள், தேசியர்களும் பிரித்தாண்டார்கள். தற்போதும் தமது பிற்போக்கான சிந்தனையின் காரணமாக சில் வங்குறோத்து அரசியல்வாதிகள் சமூகங்களை முட்டி மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியையே கையாளுகின்றார்கள்.
இதனை இனிமேலும் அடுத்த நூற்றாண்டுகளுக்கும் தொடரும் ஒரு தொற்று நோயாக விட்டு வைக்கக் கூடாது.
நாட்டின் அனைத்து சமூகங்களும் அறிவுள்ளவர்களாக அணி திரண்டு பிரித்தாளும் சதியை முறியடிக்க வேண்டும்.
அதேவேளை, அந்நியப்பட்டு நிற்காமல் முஸ்லிம் சமூகமும் அடுத்துள்ள தமிழ் சிங்கள சமூகங்களோடு அறிவுலு ரீதியாக ஆக்கபூர்வமாக அணி திரள வேண்டும்.
அப்பொழுதுதான் முஸ்லிம் சமூகமும் தனக்கான வெற்றி இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.
இன்றைய காலகட்டத்தில் என்றும் இல்லாதவாறு பெரும் நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் சந்தித்துவருகின்றது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தெடுத்து நிர்க்கதியாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டு அவை கட்டம் கட்டமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாம் எமது உரிமைகளை நிலை நிறுத்த எமது அரசியல் சக்தியை பலப்படுத்த வேண்டிய பாரிய கடமையை எதிர்நோக்கி நிற்கின்றோம். இதனைச் சரிவர செய்ய வேண்டிய சந்தர்ப்பம் தற்போது நம் முன் வந்துள்ளது.
சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமையைச் சிதைக்க வேண்டுமாயின் அதற்கான ஒருவழி அரசியல் அதிகாரங்களில் பலம் இழக்கச் செய்ய வேண்டும் என்று அடக்கியாள நினைப்போர் எதிர்பார்க்கின்றனர்.
அதற்கு சிறுபான்மைச் சமூகங்களுக்குள்ளிருந்தே சிலரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே இத்தகையவர்களை இனங்கண்டு புறமொதிக்கி சிறுபான்மைச் சமூகங்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்யக்கூடியவர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைச் சக்தியுள்ளதாக மாற்ற அனைவரும் இன மத பேதம் கடந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

