எதிர்வரும் பொதுத்தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து புதிய அணுகுமுறையுடன் போட்டியிடவுள்ளதாகவும் எந்தவொரு மத மற்றும் இன வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல் அனைவரின் ஆதரவையும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான்.
பென்தோட்டவில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
“எனக்கு இப்போது வயது 43. போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரை நான் கௌரவிக்கிறேன். அவரது தலைமையின் கீழ் பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் காணப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2015 முதல் பின்தங்கிய போக்கைக் கண்டோம். அவரது திறன்களைக் கருத்தில் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடிவு செய்தேன், ”என்று அவர் கூறினார்
கிரிக்கெட் போட்டிகளில் வென்றபோது இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்களிடமிருந்து தனக்கு கிடைத்த ஆதரவையும் கைதட்டலையும் டில்ஷான் நினைவு கூர்ந்தார், மேலும் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவேன் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
காலி மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய தனது சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்த முடியும் என்றார்.
“நான் மக்களுக்காக 1,000 வீடுகளை கட்டியுள்ளேன், ஐந்து முன் பள்ளிகளைத் திறந்தேன், குறைந்த வருமானம் கொண்ட பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினேன், 8,500 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
