எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நேற்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அதற்கமைய இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கு இணங்கவில்லை என எதிர்க்கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணிக்கு யானை சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சில தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பிரசாரம் உண்மையல்லவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
