Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனைத்து இன மக்களும் இணைந்து உருவாக்கம்பெறும் அரசியல் தலைமைத்துவமே நாட்டு மக்களின் மேலான எதிர்பார்ப்பு

February 5, 2020
in News, Politics, World
0
அனைத்து இன மக்களும் இணைந்து உருவாக்கம்பெறும் அரசியல் தலைமைத்துவமே நாட்டு மக்களின் மேலான எதிர்பார்ப்பு

தேசத்தின் அனைத்து இன மக்களும் இணைந்து உருவாக்கம்பெறும் அரசியல் தலைமைத்துவமே நாட்டு மக்களின் மேலான எதிர்பார்ப்பு என யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் நாட்டின் அனைத்து இனங்களுக்குமிடையிலான உறவில் இதுவரை ஏற்பட்டிராத இடைவெளி மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

தமக்கான உரிமை வேண்டி முன்னெடுத்த தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டன.

இருப்பினும் தேசத்தின் பாதுகாப்பு குறித்து பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்கள் சந்தேகங்கள் ஒரு புறமாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் பேரால் நிகழ்ந்த தாக்குதல்கள் மறுபக்கத்திலுமாக சேர்ந்து இனத்துவ நிலைப்பட்ட சிந்தனைகளுக்கு வழியை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்த சிந்தனையின் வளர்ச்சிப்போக்கானது நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்நிறுத்தி அதற்கு பொருத்தமான அரச தலைவர் ஒருவரை தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு நாட்டின் பெரும்பாலான மக்கள் தள்ளிவிட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

நாட்டு மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த எதிர்பார்ப்புகள் முனைப்படைந்திருந்த நிலையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் வெற்றியை கவனத்திலெடுத்து அந்த வெற்றிக்காக உழைத்த தலைவர்கள் இந்த தேர்தலில் சிங்கள மக்களின் அக்கறைக்குரிய தலைவர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மறுபக்கத்தில் இவ்வாறான ஒரு தலைமைத்துவம் கொண்டுவரப்படுமாயின் அது யுத்த சூழலின் இடம்பெற்ற அனைத்து உரிமை மீறல்களும் மீண்டும் வழியை ஏற்படுத்திவிடும் என்கிற பீதிகள் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்தரப்புக்களால் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரமானது மற்றொரு பெருந்தேசியக்கட்சியின் வேட்பாளருக்கு சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அள்ளி வழங்குவதில் சென்று முடிந்திருக்கிறது.

இந்த நிலமையானது முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டின் அனைத்து இனங்களுக்கிடையேயும் இதுவரை இருந்து வந்த இணக்கமான சிந்தனை போக்குகளை எதிரெதிர் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றன.

இதன் முடிவாக பெரும்பான்மை இனவாக்குகளை மாத்திரம் கொண்டு தேசத்துக்கான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கி விட முடியும் என்கிற புதிய நம்பிக்கைகள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இவ்வாறு சிந்திக்க தலைப்பட்டதன் மறுவிளைவாக நாட்டின் சிறுபான்மை மக்கள் இதற்கு எதிர்நிலையாக சிந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டதில் அனைத்து இனங்களுக்கிடையிலான உறவுகளும் விரிசலடைந்திருப்பதை துரதிஸ்டவசமான ஒரு நிலைமையாகவே யாழ் மாவட்டத்துக்கான பொதுஜன முன்னணியின் அலுவலகம் கருதுகிறது.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் அதனை சாட்டாக வைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களும் கூட தமக்கான அரசியல் பிழைப்பை நடாத்துவதிலேயே குறியாக இருந்த வந்திருக்கிறார்கள்.

அமைதிச் சூழல் நிலவும் இந்த 10 ஆண்டு காலத்திற்குப் பிறகும் இனத்துவ நிலைப்பட்டு தமது அரசியல் இருப்புக்காக தேசிய பாதுகாப்பை நோக்கி எச்சரிக்கையுடன் சிந்திக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதென்பது கவலைதரும் ஒரு நிலமையாகும்.

கூடவே தமது குறுகிய அரசியல் நோக்கங்கக்காக எமது தமிழ் தலைமைகளாலும் மக்கள் தூண்டப்பட்டிருப்பதை அவசியம் தவிர்த்திருக்க வேண்டிய விசனத்துக்குரிய ஒரு விடயமாகவே கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகம் கருதுகிறது.

மறு பக்கத்தில் யுத்தத்தில் அழிவடைந்த எமது தேசத்தை கட்டி எழுப்பி உதவப்போவதாக முந்திக் கொண்டு உதவிய நாடுகள் எமது நாட்டையே கடனாளி ஆக்கிய பின் பூகோள நிலைப்பட்டு எமது தேசத்தை ஆக்கிரமிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் தேசம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் அனைத்து இன மக்களதும் கவனத்துக்குரிய பிரச்சினைகளாக இன்று மாறியிருக்கின்றன.

இவ்வாறானதொரு நிலமைக்குப் பிறகு நிலையான அமைதியான தேசத்தில் அனைத்து இன மக்களோடும் நேர்மையான வெளிப்படையான இணக்கமான, உறவை கட்டியெழுப்புவதே தமிழ் மக்களின் மேலான அக்கறைக்குpய விடயமாக இன்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக நாட்டின் அனைத்து இன மக்களுக்குமான வளமான வாழ்வுக்கான அரசியல் தலைமைத்துவமொன்றை அனைத்து இன மக்களும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டுமென்பதே தமிழ் மக்களது பெரும் மன ஆதங்கமாக இருந்து வருவதை கட்சியின் யாழ் அலுவலகம் தனது மேலான கவனத்துக்காக எடுத்துக் கொள்கிறது.

உரிமையின் பேரால் தமிழ் மக்களை தேசமாக சிந்திக்க தூண்டி அந்த விடுதலைக்கான உணர்வு பூர்வமான அக்கறையில் தமக்கான அரசியல் அதிகாரத்தை தமிழ் தலைமைகள் தக்கவைத்துக்கொண்டார்கள்.

இருப்பினும் தமிழ் மக்களின் நிஜவாழ்க்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியதன் விளைவாக யுத்த சூழலில் முகம் கொடுக்காத வாழ்க்கை நெருக்கடிகளை சமகால அமைதிச் சூழலிலும் தமிழ் மக்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டமைக்கு இந்த தமிழ் தலைமைகளே காரணமென்பதையும் கட்சியின் இந்த யாழ் அலுவலகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே இனத்தின் பேரால் மதத்தின் பேரால் நாட்டு மக்கள் கூறுபடுத்தப்படும் அரசியல் வழிமுறையை தவிர்த்து அனைத்து இனங்களுக்குமிடையிலான சக வாழ்வின் மூலம் நிலையான அமைதியான சுபீட்சம் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலை தமிழ் மக்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதையே பொதுஜன முன்னணியின் யாழ் அலுவலகம் தனது பிரதான இலட்சியமாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சங்கள், சந்தேகங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை தவிர்ப்பதோடு அதனை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தையும் அவசியமான ஒரு நடவடிக்கையாகவே பொதுஜன முன்னணி கருதுகிறது.

இதற்கான ஏற்பாடாக வடக்கு கிழக்கு மக்கள் சக இனமக்களோடு இணைந்து புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பவென நாடு தழுவி தேசிய நல்லிணக்கத்துக்கான வேலைத்திட்மொன்றை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கட்சியின் யாழ் மாவட் அமைப்பாளர் ரஜீவ் மேற்கொண்டுள்ளார்.

மேலும் எமது மக்களுக்காக தேசிய ரீதியில் அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் அவசியமான பணியாக நம்முன் வந்து நிற்கிறது.

இது விடயத்தில் தமிழ் தேசிய தலைவர்களும் கூடவே வடக்கின் நிர்வாக கட்டமைப்புக்களும் அலட்சியமாக இருந்து வருவதை தமிழ் மக்களின் முன்னேற்றத்தின் மீது தடைகளை உருவாக்கும் செயற்பாடாகவே எமது கட்சி அலுவலகம் கருதுகிறது.

மேலும் தேசவிடுதலையின் பேரால் தமிழ் தேசம் தன்னகத்தே கொண்டிருக்கும் அகமுரண்பாடுகளால் ஒரு சீரான அபிவிருத்தியை முன்னெடுப்பதில் பாதிப்புக்குள்ளான மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதன் மூலமான பின்னடைவுகள் கட்சி அலுவலகத்தின் மேலான கவனத்துக்குரிய விடயங்களாக முன்நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமக்கான விடுதலை வேண்டி அரசுக்கெதிராக தமிழ் மக்கள் தூண்டப்படும் அதேசமயம் அம்மக்களுக்கான அபிவிருத்தி வாழ்நிலை மேம்பாட்டில் பாரபட்சம் காட்டப்படுதை தமிழ் தலைமைகள் கண்டும் காணாமல் இருந்து வருவது அம்மக்கள் மீதான ஒரு நேர்மையற்ற அணுகுமுறையாகவே பொதுஜன முன்னணி கருதுகிறது.

தமிழ் சூழலில் கல்வி தொழில் வாய்ப்பு மற்றும் அபிவிருத்தியில் பாரபட்சமான அணுகுமுறைகள் இடம்பெறுவதை தவிர்ப்பதோடு வளவாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தியில் அவர்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவதும் அவசியமான பணியாகும்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுடன் பதவியேற்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களின் புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கான துரித அபிவிருத்தியை முன்னெடுத்தல் எனும் பாரிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தல் என்பதை பிரதான ஒரு செயன் முறையாக தனது மேலான கவனத்துக்காக எடுத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கென தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு வசதியாக மாவட்ட, பிரதேச, வட்டார, கிராமசேவகர் பிரிவு மட்டத்தில் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அவசியமான திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை கட்சியின் யாழ்மாவட்ட அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

புதிய அரசின் இந்த செயற்திட்டத்துக்கு வலுவூட்டுவதற்கான ஏற்பாடாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசின் இந்த நல்லெண்ணம் நடைமுறைக்கு வரும் வகையில் ஓரணியில் திரண்டு தமது ஆதரவை தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டுமெனவும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகம் கோரி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி 95ஆவது வயதில் காலமாகியுள்ளார்!

Next Post

சீன நாட்டவர்கள் குறித்து அஸ்கிரிய பீடம் விடுத்துள்ள அறிவிப்பு!

Next Post

சீன நாட்டவர்கள் குறித்து அஸ்கிரிய பீடம் விடுத்துள்ள அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures