சீனா உட்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை வருகின்ற சீனப் பிரஜைகள் உட்பட பன்னாட்டுப் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக விசேட பரிசோதனைகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொரோனா வைரஸ் குறித்த கேள்வியை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமரும் என்னிடம் கேட்டறிந்துகொண்டதோடு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்திருந்தனர். எமது நாட்டிற்கு வருகின்ற அனைத்து விமானப் பிரயாணிகளுக்கும் அறிவித்தல் ஒன்றை வழங்குகின்றோம்.
வைரஸ் சம்பந்தமாக அறிகுறிகள் உணர்ந்தால் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட கூடாரத்திற்கு வருகைதந்து தகவல் அளிக்குமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டு வருகின்றது.
விசேட மருத்துவக் குழுவும் விமான நிலையத்தில் சேவையாற்றி வருகின்றது. ஒரு சம்பவம் மாத்திரமே கண்டறியப்பட்டது.
சீனக் குடும்பம் ஒன்றின் சிறு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் விமான நிலையத்திலுள்ள மருத்துவப் பிரிவுக்கு வந்து தகவல் அளித்திருந்தனர்.
அதன்படி குழந்தையை ஐ.டி.எச் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் அவர் திரும்பியுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். இதுவரை கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.

