ஓமான் நாட்டை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் காபூஸ் பின் சையத் தனது 79 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு காபூஸ் பின் சையத் அல் சையத் ஆட்சி பீடம் ஏறினார். இவர் பதவிக்கு வந்தது முதல் எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
இந்நிலையிலேயே நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஓமான் அரசு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அரபு உலகில், மிக நீண்டகாலம் நாடொன்றினை ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
மஸ்கத் மற்றும் ஓமானின் சுல்தான் சயீது பின் தைமூரின் ஒரேயொரு மகனான காபூசு பின் சயீது இங்கிலாந்தில் கல்வி கற்றவர்.
இவர் அரச இராணுவக் கல்வி நிலையத்தில் படித்துப் பட்டம் பெற்றார். 1970இல் நடந்த ஒர் இராணுவப் புரட்சியில் தனது தந்தையை ஆட்சியில் இருந்து கவிழ்த்து விட்டு சுல்தானாக முடிசூடினார்.
இவரது தலைமையில், ஓமான் நாட்டில் வாழ்க்கைத் தரம் மற்றும் அபிவிருத்தி ஆகியன பெரும் வளர்ச்சி கண்டதாக கூறப்படுகின்றது. இவருக்கு பிள்ளைகள் கிடையாது. மூன்று சகோதரிகள் உள்ளனர். அதனால், ஏனைய அரபு நாடுகள் போலன்றி இவர் இதுவரை தன்னுடைய வாரிசு யார் என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால் தனக்குப் பின் யார் ஆட்சியில் வரவேண்டும் என்று உயில் எழுதி முத்திரையிட்டு இராணுவ அமைச்சரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

