இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற ஒன்று கிடையாது எனவும், இஸ்லாமிய மார்க்கம் அடிப்படைவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எவனோ ஒருவன் செய்த குற்றத்துக்காக இஸ்லாமியர்களை குற்றம் சொல்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறிய கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இதனைக் கூறியுள்ளார்.
உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் தமிழ் புலனாய்வு அதிகாரி ஒருவரை நியமித்திருந்தால் தமிழ் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருக்க முடியுமா? எனவும் அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவிற்கும், அரச புலனாய்வு பிரிவிற்கும் தனக்கு நெருக்கமான அதிகாரிகளையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாத பின்னணியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவரே செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், முதலில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் அதிகாரி ஒருவர் அரச புலனாய்வு பிரிவிற்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையினால், அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட அவரால் முடியாது எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

