ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்கர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லையெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது எனவும் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான்- அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.
நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். ஈரான் தனது அணு ஆயுத கனவை கைவிட வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும்.
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கா விரும்புகிறது. உள்நாட்டில் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஈரான் வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக இராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை.
ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மசகு எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

