உலகில் அதிக பாதுகாப்புடன் கூடிய ஜனாதிபதி மாளிகையாக கருதப்படும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடாத்த முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஈரானின் 52 முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடாத்துவதாக விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே ஈரான் இதனைக் கூறியுள்ளது.
எமக்கு வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடாத்த முடியும். எமக்கு அவர்களது மண்ணில் இருந்தே பதிலடி கொடுக்க முடியும். அதற்கான பலம் எம்மிடம் உள்ளது. இறைவனின் பொருத்தத்துடன் பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை நாம் செய்வோம் எனவும் ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அபோல் பஸ்ல் அபு துராபி அறிவித்துள்ளார்.
ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அபுதுராபி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் யுத்தப் பிரகடனம் ஆகும். நாம் தாமதித்தால், அதனால் எமக்கு கிடைப்பது தோல்வியாகும். யாராவது யுத்தப் பிரகடனம் செய்யும் போது அவருக்கு தகுந்த தாக்குதல் பதிலாக கொடுக்காமல், மலர் மாலை கொடுத்து பதிலளிக்கும் போது அவர் எமது தலைக்கே துப்பாக்கிப் பிரயோகம் செய்து விடுவார் எனவும் அவர் தனது பாராளுமன்ற உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா ஆரம்பித்துள்ள யுத்தத்துக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

