ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள ‘‘கிறீன் ஸோன்” பிரதேசத்தின் மீது மோட்டார் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
பக்தாத் நகரிலுள்ள ‘‘கிறீன் ஸோன்” பிரதேசம் சர்வதேச வலயமாக அடையாளப்படுத்தப்படும் ஒரு பகுதியாகும்.
அமெரிக்காவின் தாக்குதலையடுத்து இவ்வாறு ஈராக்கின் பக்தாத் நகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று அறிவித்துள்ளது.
ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் பக்தாத் நகரிலுள்ள ‘‘கிறீன் ஸோன்” பிரதேசத்திலேயே அமையப் பெற்றுள்ளது. இது அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்றது.
இந்த தாக்குதல்கள் பக்தாத் நகரிலுள்ள ‘‘கிறீன் ஸோன்” பிரதேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்டவுடன் அமெரிக்க தூதரகத்திலுள்ள அபாய எச்சரிக்கையை வெளிப்படுத்தும் சத்தம் எழுப்பப்பட்டதாக பிரான்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, வடக்கு பக்தாத் பிரதேசத்திலுள்ள பலாத் விமானப்படை முகாம் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் இரண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இப்பிரதேசத்திலேயே அமெரிக்க படையினர் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இங்கும், ஏவுகணைத் தாக்குதலையடுத்து அபய எச்சரிக்கையை வெளிப்படுத்தும் சத்தம் எழுப்பப்பட்டதாகவும், ஏவுகணை ஏவப்பட்ட பிரதேசத்தைக் கண்டறிவதற்கு ‘‘ட்ரோனர் கருவி” அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

