நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எட்டியாந்தோட்டை டாக்டர்.என்.எம் பெரேரா மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்லி வைபவத்தில் பிரதம அதியாக ககலந்துக்கொண்டு உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு கூறினார்.
எட்டியாந்தோட்ட பரத கலாலயத்தின் பொறுப்பாசிரியை திருமதி அமூர்தனி குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, எட்டியாந்தோட்ட பிரதேச சபை தலைவர் கே. டி .வசந்த, எட்டியாந்தோட்ட பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும் எட்டியாந்தோட்ட இந்து மன்றம் மற்றும் ஸ்ரீ விநாயகர்ஆலய பரிபாலன சபை செயலாளருமான சி.கே. முருகேசு , மலையக மக்கள் முன்னணியின் உப செயலாளர் ஜி. ஜெகநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மனோ கணேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் ஆட்சி மாற்றங்கள் வரலாம். ஜனாதிபதிகளில் மாற்றங்கள் வரலாம். ஆனால் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.
எட்டியாந்தோட்டை மண்ணின் மைந்தன் என்ற ரீதியில் நான் கூறவிரும்புவது இந்த எட்டியாந்தோட்டை மண்ணுக்கு தனி சிறப்பு இருக்கின்றது.
இந்த மண்ணில் பிறந்தவர்கள் இன்று எத்தனையோ அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்விமான்கள் இருக்கின்றார்கள். இங்கு தமிழ், சிங்களம், முஸ்லீம்கள் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்து வருகின்றார்கள்.
இன்று இங்கு நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்விலும் இந்து மாணவிகளுடன் பௌத்த மாணவிகளும் பங்கு பற்றியுள்ளார்கள் இது ஒரு இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. எங்களது சிறப்பை புரிந்துக்கொண்ட சிங்கள மாணவிகளும் பங்கு பற்றியிருப்பது வரவேற்கதக்கது.
இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கின்றது.பௌத்த ஆலயங்களில் இந்து தெய்வங்களின் சிலைகளும் இந்து ஆலயங்களில் புத்தர் சிலையையும் வைத்து மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.
முதன் முறையாக எட்டியாந்தோட்டையில் நடைபெறும் பரத நாட்டியாஞ்சலி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.
இதனை ஏற்பாடு செய்த பரத கலாலயம் ஆசிரியை திருமதி அமூர்தனி குலேந்திரனை பாராட்டுகின்றேன். இந்த பரத கலையை இங்கு மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என கூறினார்.

