குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு நகர சபைகளும் பிரதேச சபைகளும் செயற்திறனுடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
செயற்திறன்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையே ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி தேர்தலின்போது தனது வெற்றிக்காக கீழ்மட்டத்திலிருந்து பெரும் சக்தியாக செயற்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.
மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளை உரியவாறு நிறைவேற்றுவதே எனக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்கள் கையளித்துள்ள சவால்மிக்க பொறுப்பாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

