கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இலவச வீசா நடைமுறை, அடுத்த ஆண்டுடன் காலாவதியாகவுள்ளதால் அதனை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் சுற்றுலா, விமானத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக இலவச வீசா நடைமுறையை 48 நாடுகளுக்கு விஸ்தரிக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது.
இந்த இலவச வீசா நடைமுறையால் 4 பில்லியன் ரூபா இலங்கைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இலவச வீசா நடைமுறையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தரவில்லையென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கையை இரத்துசெய்யுமாறு கோரியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சிகண்டிருந்ததுடன், உள்நாட்டில் பல்வேறு தேவைகளின் நிமித்த தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர்.
என்றாலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக பல நாடுகளுக்கு இலவச வீசா நடைமுறையை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இவ்வாண்டு இறுதியுடன் குறித்த இலவச வீசா முறைமையை காலாவதியாவதால் இதுகுறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக மேலும் ஒருமாதகாலம் இலவச வீசா நடைமுறை தொடர வேண்டுமென்பதே எமது நோக்கமாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதுதொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

