தேசிய கீதம் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த சில தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சிப்பதாக சத்திய கவேசகயோ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காகவா குரல் கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுகின்றது. தமிழில் தேசிய கீதம் தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி., சம்பந்தன் எம்.பி. ஆகியோரின் அறிவிப்புக்கள் அடிப்படைவாதமாகவே காணப்படுகின்றது.
இவர்கள் தொடர்ந்தும் தனித்தாயகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசியலமைப்பின் 157 ஆவது உறுப்புரையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற அறிவிப்பொன்றுக்காக ஏற்கனவே சுமந்திரன் எம்.பி.க்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அது சமாதானமாக தீர்க்கப்பட்டமை நினைவிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

