எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு வர்த்தமானி அறிவித்தல் மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கமைய, புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி சிம்மாசன உரையை நிகழ்த்த உள்ளார்.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுக்கான ஆசன ஒதுக்கீடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவல தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் ஆசனத்திற்கு வலது பக்கமாக ஆளும் கட்சியினரும், இடது பக்கமாக எதிர்க்கட்சியினரும் அமர்வது வழமையான சம்பிரதாயமாகும்.
இதற்கமைய, சபாநாயகருக்கு வலது பக்கமாக உள்ள எட்டவது ஆசனம் ஜனாதிபதிக்கும், ஏழாவது ஆசனம் பிரதமருக்கும் ஒதுக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, சபை முதல்வர் மற்றும் ஆளுந்தரப்பு பிரதம அமைப்பாளராக நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஆறாவது மற்றும் ஐந்தாவது ஆசனங்கள் ஒதுக்கிடப்படும்.
இதேவேளை, சபாநாயகருக்கு இடது பக்கமாக உள்ள எதிர்த்தரப்பின் எட்டாவது ஆசனம் எதிர்க்கட்சித் தலைவருக்கும், ஏழாவது ஆசனம் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளருக்கு ஒதுக்கிடப்படும்.
குறித்த பதவிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

