கண்டி ஜனாதிபதி மாளிகைக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரகசியமான முறையில் நுழைந்தமையினால் பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள மதிலில் ஏறி உள்ளே நுழையும் வரை பாதுகாப்பு பிரிவினர் அறியாமல் இருந்தார்கள் என்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை பகுதிக்குள் நுழைந்த நபர் அதில் இருந்து வெளியே செல்ல எடுத்த முயற்சி தோல்வியடைந்தமையினால் வெளியே செல்வது எவ்வாறு என பாதுகாப்பு பிரிவினரிடம் சென்று வினவியுள்ளார்.
இதன் போதே பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைந்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான தான், ஜனாதிபதி மாளிகை என தெரியாமல் அதற்குள் நுழைந்ததாக பொலிஸாரிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இடத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் சந்தேக நபர் உட்பட குழுவினர் ஈடுபட்டுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

