ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க உதவிபுரிவோம் என தான் கூறியாதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் போலியானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகளுக்கு அமைய யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக கொழும்பு ஊடகம் ஒன்று பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தது.
அத்துடன், ஐக்கிய தேசியக் முன்னணிக்கு 113 ஆசன அதிகாரத்தை காட்டுவதற்கான தேவையேற்பட்டால் தாம் அவர்களுக்கு ஆதரவு வழங்க தயார்.
பொது தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் உறுப்பினர்களுக்கு அமைய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.
நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள உறுப்பினர்களை விடவும் அதிக உறுப்பினர்கள் உரிய முறையில் கிடைப்பார்கள்
இந்த மகத்தான வெற்றியின் மூலம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க கூட்டமைப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்” என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
எனினும், அந்த செய்தியில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நான் சொன்னதாக பொய்யான செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஞாயிறு அன்று நான் வடக்கு மாகாணத்திலேயே இருக்கவில்லை. எந்தக் கட்சிக் கூட்டத்திலும் பங்குபற்றவும் இல்லை” என கூறியுள்ளார்.

