குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தானில் வாழும் பாகிஸ்தான் இந்து அகதிகள் பேரணி நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து அகதிகள், இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று (திங்கட்கிழமை) பேரணி நடத்தினர்.
இப்பேரணி குறித்து அகதி ஒருவர் கூறும்போது, “கடந்த 57 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இதுவரை நாங்கள் குடியுரிமை பெறவில்லை. போதிய வசதிகளும் கிடைக்கவில்லை. இனி நாங்கள் சிறப்பாக வாழ இந்தச் சட்டம் உதவியாக இருக்கும்” என்றார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களைத் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த சட்ட வரைபுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

