இலங்கையில் இரண்டு அரச மொழிகளே உள்ள போதிலும் சகோதர மொழியைப் பற்றி இன்னும் ஒருவர் தெரியாமல் இருப்பதற்கு கல்வி முறைமையே காரணம் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற அகில இலங்கை இரண்டாவது தேசிய மொழி போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் 21 மில்லியன் மக்கள் வாழ்கின்ற போதிலும் இரண்டு மொழிகளே பேசப்படுகின்றன. எனினும், சகோதர மொழியைப் பற்றி நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் வெட்கப்பட வேண்டியுள்ளது.
இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு கடந்த 72 வருடங்களாக முகங்கொடுத்து வருகின்றோம். நாட்டின் கல்வி முறையில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வந்து இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இரகசியம் என்னவெனில் தேசிய இனங்களாக ஒன்றிணைந்து செயற்பட்டமையாகும். 45 இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ள எமது மாணவர்கள் ஆற்றல் மிக்கவர்களாவர். ஆற்றல் உள்ளோர், ஆற்றல் அற்றோரென மாணவர்களை வகைப்படுத்தக்கூடாது எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

