புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர், அன்றையதினமே சபையின் கூட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் அன்றையதினமே பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதியினால் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதில் 2020 ஜனவரி 07 ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்றையதினம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றல்¸ பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரினால் அறிவிக்கப்படுதல் மற்றும் சபாநாயகரின் அறிவிப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளதாகவும் அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

