மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறுக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வெளியேறு வெளியேறு ஊடக சுதந்திரத்தை மிதிக்கும் அரச அதிகாரியே வெளியேறு, அரச அதிகாரிகளே ஊடகவியலாளர்களை அடக்க நினைக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செ.நிலாந்தன் மீது போலியான அரச ஆவணங்களை பயன்படுத்தி போலியான செய்திகளை வெளியிட்டு வருவது தொடர்பில் முறையான விசாரணை செய்யுமாறு கோரியும் பிரதேச செயலாளர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை அரசாங்க விசாரணை செய்யவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

