கல், மண் மற்றும் மணல் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரம் பெறும் அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் அரசியல்வாதியொருவர் உட்பட மணல் விற்பனையாளர்கள் பாரியளவில் மண் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக இலங்கையைப் பாதுகாப்போம் அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த வியாபாரம் திவுலப்பிட்டி, அம்பாறை, புத்தளம், யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணல் விற்பனையாளர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றிச் செல்லும் போது இடையில் பொலிஸாருக்கு சோதனை நடாத்தவும் முடியாமல் இருப்பதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மகஜர் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமானால் சூழலியலாளர்களுடன் இணைந்து அதற்கு எதிராக மக்கள் கருத்தொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஆனந்த சாகர தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

