Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் மோதல்

December 16, 2019
in News, Politics, World
0

லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அறிவித்து தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்டுள்ள விவகாரம் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளில் உரசல்களை ஏற்படுத்தியிருக்கிறதாக கட்டுரையாளர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தனது கட்டுரையில் அவர் மேலும்,

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை, கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரிக்கை செய்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ.

இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பணியிலிருந்த அவரது இந்த செயல் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி இருந்தது. அவருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டது.

அவரை அங்கிருந்து திருப்பி அழைத்துக் கொள்ளுமாறும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் வலியுறுத்தியிருந்தது. இதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்றும் ஜெனிவா சட்டங்களின்படி அவருக்கு இராஜதந்திர விலக்கு உரிமை இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.

பின்னர் பிரிகேடியர் பிரியங்க ராஜதந்திர விலக்கு உரிமையை கொண்டிருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அடுத்து அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

எனினும் புலம்பெயர் தமிழர்கள் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் பிரித்தானியாவின் பொது ஒழுங்கு சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மீறினார் என பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ முன்னிலையாகாத நிலையில் விசாரணைகள் நடத்தப்பட்டு கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி பிரித்தானியாவின் பொது ஒழுங்கு சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மீறி குற்றமிழைத்துள்ளார் என்றும் அதற்காக 2400 பவுண்ட் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாம் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குள் இந்த தீர்ப்பு வந்திருப்பது தம்மை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறது புதிய அரசாங்கம்.

தமது தூதரகத்தில் ராஜதந்திர அந்தஸ்துடன் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை குற்றவாளியாக அறிவித்திருப்பது சர்வதேச நியமங்களுக்கு எதிரானது என்றும் கருதுகிறது அரசாங்கம்.

இந்த இரண்டுக்கும் அப்பால் புலம்பெயர் தமிழர்களையும், பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலையும் இவற்றுடன் இணைத்தும் பார்க்கிறது, பல கோணங்களில் இந்த தீர்ப்பை தொடர்புபடுத்தி இலங்கைக்கு எதிரான நடவடிக்கையாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்த தீர்ப்பு வெளியாகும் முன்னரே இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் பிரித்தானியாவுக்கும் மேடையில் முட்டிக் கொள்ளும் சூழ்நிலை காணப்பட்டது.

2018 ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்த நாடு பிரித்தானியா தான். ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் அதற்கு பதிலாக பிரித்தானியா தலைமையிலான நாடுகள் அந்த தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தன.

அதற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது நாட்டின் இறைமையை, அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் நியாயம் கற்பித்து வருகின்றனர்.

அதனால் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்ள போவதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது. ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பது அல்லது வாக்குறுதிகளில் இருந்து நழுவிக் கொள்வது என்பது வேறு விடயம்.

முன்னைய அரசாங்கம் அவ்வாறுதான் நடந்து கொண்டது. ஆனால் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தால் அந்த தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகள் தமக்கு எதிராக செய்யப்பட்ட போர் பிரகடனமாகவே எடுத்துக்கொள்ளும்.

தம்மையும் சர்வதேச கட்டுப்பாட்டையும் மதிக்காமல் நடந்து கொள்ளும் செயற்பாடாகவே பார்க்கப்படும். அவ்வாறான ஒரு முடிவை எடுக்க இலங்கையின் புதிய அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவுகள் குறித்து தான் அதிகம் சிந்திக்கிறது. எவ்வாறாயினும் ஜெனிவாத் தீர்மானத்துக்கு கட்டுப்பட போவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புகளும், எச்சரிக்கைகளும் பிரித்தானியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான முறைகளை ஏற்படுத்தி இருந்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள், ஜெனிவா தீர்மான அமுலாக்கம், அடுத்த கட்ட ஜெனிவா நகர்வுகள் குறித்து இந்த சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதுவும் அரசாங்கத்துக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு நடந்த சில நாட்களுக்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், ஜெனிவா தீர்மான விவகாரம் குறித்து அதற்கு ஆதரவளித்த நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுகளை ஆரம்பித்து விட்டோம் என்று கூறியிருந்தார்.

கால முறைப்படி வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் புதிய அரசாங்கம் இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற சிக்கலான கேள்வி இருந்து வருகிறது.

இவ்வாறான சூழலில் ஜெனிவா நகர்வுகள் குறித்து பிரித்தானியா இப்போதே கூட்டமைப்பு உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனையில் இறங்கியிருப்பது இட்டு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை அடைந்து இருக்கிறது.

அதேவேளை பிரித்தானியாவில் கடந்த 12ஆம் திகதி நடந்த தேர்தலுக்காக கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

இலங்கையில் பிரச்சினையை தீர்க்க இரண்டு தேசங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக வியாக்கியானங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்கும் இலங்கை அரசாங்கத்தில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இலங்கையை பிளவுபடுத்த பிரித்தானியா முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நாட்டின் வரலாறு தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில காலனி ஆதிக்கத்திற்கு முன்னர் வடக்கு-கிழக்கில் தமிழ் அரசு எப்போதும் இருந்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னர் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன என்ற வரலாறு பாடப் புத்தகங்களில் கூட உள்ளதை அவர் மறந்து விட்டார்.

இரு தேசங்களாக அறிவிப்பதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பது போன்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அரசாங்கம் கடுமையான சவாலாக கருதுகிறது.

இந்தச் சூழலில்தான் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான தீர்ப்பை அளித்திருந்தது. பிரித்தானியாவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது போல இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.

பிரித்தானியாவின் நீதித்துறை அரசியல் லாபங்களுக்காக தீர்ப்புகளை அறிவிக்கும் அளவுக்கு மோசமான தரம் தாழ்ந்தது அல்ல. அந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியாதது அல்ல.

ஆயினும் சிறுபிள்ளைத்தனமாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு பிரித்தானியாவுடன், இலங்கை அரசாங்கம் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே மோதலுக்கு தயாராகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் ராஜதந்திர விலக்குரிமையை வைத்து அவரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அந்த ராஜதந்திர விலக்குரிமையை நிராகரித்தே தீர்ப்பை அளித்திருக்கிறது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.

இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் குறுக்கீடு செய்ய முனையவில்லை. அதற்கு தேர்தல் காலமாக இருந்ததும், தேர்தலில் இலங்கைத் தமிழரின் வாக்குகள் பலம் மிக்கவையாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்தநிலையில் பிரித்தானியாவிலும் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் இந்த விவகாரம் இன்னும் சூடு பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடன் தொடங்கிய மோதல்கள் இப்போது மெல்ல மெல்ல தணிய தொடங்கியுள்ள நிலையில் பிரித்தானியா, சுவிஸ் என அந்த முரண்பாடுகள் திசை திரும்பி இருக்கின்றன.

எல்லா நாடுகளுடனும் நல்லுறவு என்ற இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண தொடங்கிவிட்டதை தான் இந்த முரண்பாடுகள் கோடிட்டு காட்டி நிற்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு

Next Post

கோட்டாபயவிற்கு பதில் வழங்கியுள்ள பிரித்தானிய பிரதமர்

Next Post

கோட்டாபயவிற்கு பதில் வழங்கியுள்ள பிரித்தானிய பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures