ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இதனைக் கூறியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்தும் ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக குறிப்பிட்டும் சில நபர்களால் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுதல் போன்ற பல்வேறு மோசடி செயல்கள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதியினதும் ஜனாதிபதி செயலகத்தினதும் அனுமதியின்றியே இடம்பெற்றுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தயவுடன் அறியத்தரும் அதேவேளை, அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தகவலறியக் கிடைப்பவர்கள் தாமதமின்றி உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் செயலகம் கேட்டுள்ளது.
இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் செயலகம் பொதுமக்களைக் கேட்டுள்ளது

