முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் நேற்று (13) இரவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதுல சஞ்ஜீவ மதநாயக்க மற்றும் அண்டனி டக்ளஸ் பிரணாந்து ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆட்கடத்தல், சித்திரவதை செய்தல், கொலை செய்தல், தங்கம், யுரோ நிதி கடத்தல் என்பன தொடர்பில் இவர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
சிங்களயே அமைப்பின் தேசிய அமைப்பாளர் குமுது பிரதீப் சஞ்ஜீவ என்பவரினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

