ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த் தனது கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், அதையடுத்து தான் எடுத்த சபதம் குறித்தும் பேசினார்.
அதாவது, 16 வயதினிலே படத்தில் நடித்து வந்தபோது ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் தான் தயாரிக்கும் ஒரு படத்தில் என்னை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அழைத்தார். நான் பத்தாயிரம் சம்பளம் கேட்டேன். ஆனால் அவர் ஆறாயிரம் தருவராக சொன்னார். அதையடுத்து முன்பணமாக ஆயிரம் ரூபாய் கேட்டேன். படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பு தருவதாக சொன்ன அவர், தரவே இல்லை. அதனால் ஆயிரம் முன்பணம் தந்தால்தான் நடிப்பேன் என்று நான் சொன்னதால், என் படத்தில் உனக்கு வேலை இல்லை. வெளியே போ என்று அவர் சொல்லிவிட்டார்.
அதனால் மிகுந்த மனவேதனையுடன் நான் வெளியே சென்று கொண்டிருந்தபோது சிலர், இது எப்படி இருக்கு என்று என்னைப்பார்த்து கிண்டல் செய்தார்கள். அப்போதுதான் இதே கோடம்பாக்கத்தில் இதே சாலையில் இதே ஏவிஎம் ஸ்டுடியாவில் ஒரு பெரிய ஸ்டாராகத்தான் உள்ளே நுழைவேன் என்று எனக்குள் ஒரு சபதம் எடுத்தேன். அதன்பிறகு இரண்டே வருடத்தில் சில படங்களில் நடித்து சம்பாதித்து ஒரு வெளிநாட்டு கார் வாங்கினேன். அந்த காருக்கு ஒரு வெளிநாட்டு நபரை டிரைவராகவும் போட்டேன். பின்னர் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் சென்று அதே இடத்தில் அந்த காரை நிறுத்தி விட்டு ஸ்டைலாக சிகரெட் பிடித்தேன்.
பின்னர் கே.பாலசந்தர் சாரிடம் சென்று என் காரை ஆசீர்வதிக்க சொன்னேன். ஆனால் அவரோ, காரையும், வெளிநாட்டு டிரைவரையும் மேலும் கீழும் பார்த் தவர் எதுவும் சொல்லாமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வந்து யோசித்தேன்.
அப்போதுதான் இந்த வெற்றி எனக்கு மட்டுமே கிடைத்ததல்ல. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நான் நடித்த கேரக்டர், அந்த படத்தின் வெற்றி இது எல்லாமே சேர்ந்துதான் எனக்கு இந்த வெற்றியை கொடுத்தது. இது எல்லாம் சேர்ந்துதான் என்னை பெரிய ஆளாக்கியது என்பதை புரிந்து கொண்டேன் என்று சொல்லி, நான் அடைந்துள்ள இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணமல்ல என்னை வைத்து படமெடுத்த அனை வருக்கும் பங்கு உண்டு என்பது போல் பேசினார் ரஜினிகாந்த்.

