ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது.
இதையடுத்து ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக, சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங்கியிருந்தது.
தற்போது, அமுலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் பிணை வழங்கப்பட்டுள்ளதால் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார்.
அவர் மொத்தமாக 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

