தனது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
தான் கடந்த 44 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும், நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கட்டணத்தையும் இதுவரை தான் எந்தவித குறையும் இன்றி தொடராக செலுத்தியுள்ளேன் எனவும் நேற்று (3) சகோதர ஊடகமொன்றிடம் அவர் கூறியுள்ளார்.
எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தப் பதவியைக் கொடுப்பதற்கு என்றிருந்தால், என்னிடம் கட்சி அது குறித்து கலந்துரையாடியிருக்கிலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியாயமற்ற முறையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதை விட்டுவிட்டு, என்னிடம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு உறுப்பினர் பதவியைக் கேட்டிருந்தால், நான் ஒருபோதும் தீர்மானம் எடுக்கப் பின்நின்றிருக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

