ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று (திங்கட்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் சீரான மற்றும் பாகுபாடற்றதாக மாற்றுவதில் இலங்கை கவனம் செலுத்தும்.
முன்னைய அரசாங்கத்தினால் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும் குறிப்பாக கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம், படைகளின் நிலை (சோபா) மற்றும் மிலேனியம் சவால் (எம்.சி.சி) ஆகியவற்றை இலங்கை மறுபரிசீலனை செய்யும். தேவைப்பட்டால் திருத்தங்களை அறிமுகப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.













