ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஊடகங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென கஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வவுனியாவில் நடைபெற்ற கலந்துரையாடலில், கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”இம்முறை தேர்தலில் அதிகமான ஊடகங்கள் ஒவ்வொரு வேட்பாளரை சார்ந்து செயற்படுவதை தெளிவாக அவதானிக்கக்கூடியவாறு உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் செயற்பாடு தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கையின் பின்னர் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிடுவோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுயாதீன தொலைக்காட்சியின் சகல அரசியல் நேரடி நிகழ்ச்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணைக்குழு தடைசெய்து, பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது. அரச ஊடகங்களை கட்டப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளதென்பதை இவ்விடயம் சுட்டிக்காட்டுகின்றது.
ஆனால் தனியார் ஊடகங்களை தேர்தல் சட்டங்களினூடாக கட்டப்படுத்தும் முழுமையான அதிகாரம் இல்லை என்பதால் சில ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில், சில வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கி தமது ஊடகங்கள் ஊடாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு ஊடக வழிகாட்டலை மீறுகின்ற சகல ஊடகங்களுக்கும் பொதுவான ஒரு சட்டத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலம் எழுந்துள்ளது.
எதிர்வரும் காலப்பகுதியில் ஊடகங்கள் தொடர்பாக சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான சகல செயற்பாடுகளையும் முன்னெடுப்போம்’ என்றார்.
இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை கஃபே அமைப்பிற்கு 684 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

