தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனும் ஒருவர்.
அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் நேற்று கைவிடப்பட்டன.
அந்த இரண்டு குற்றச்சாட்டுகளைக் கைவிட அரசாங்க வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதை சிரம்பான் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது
குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதைத் திரு குணசேகரனின் வழக்கறிஞரும் ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆர்.எஸ்.என். ராயர் வரவேற்றார்.
திரு குணசேகரன் நேற்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதை அறிந்து நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த குணசேகரனுக்கு ஆதரவான கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது.
அவர்களில் குணசேகரனின் குடும்பத்தார், மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், ஜனநாயகச் செயல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், ஜனநாயகச் செயல் கட்சித் தலைவர் டான் கோக் வாய் ஆகியோரும் அடங்குவர்.
கைவிடப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு எவ்வித தகவலும் இல்லை என்று திரு ராயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்படுவதாக இன்று காலைதான் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. வழக்குவிசாரணை நடத்தப்படாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்,” என்றார் திரு ராயர்.
குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொண்டதற்காக அரசாங்க வழக்கறிஞர்களிடம் திரு ராயர் நன்றி தெரிவித்தார்.
அதேபோல திரு குணசேகரனுக்கு எதிராக மற்ற நீதிமன்றங்களில் பதிவாகி உள்ள குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“திரு குணசேகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு பொறுப்புமிக்க சட்டமன்ற உறுப்பினர். தமது தொகுதி மக்களை அவர் மிகச் சிறப்பான முறையில் பார்த்துக்கொள்கிறார்.
“எனவே, மற்ற நீதிமன்றங்களில் அவருக்கு எதிராகப் பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுவுடன் நாங்கள் கலந்துரையாடினோம். சோஸ்மா, அதைப் போன்ற மற்ற சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
“நாடாளுமன்றம் அடுத்து கூடும்போது இதுதொடர்பான சட்டத் திருத்தங்கள் அமலாக்கம் செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்று திரு ராயர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 10ஆம் தேதியன்று மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, பேராக், கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் திரு குணசேகரன், காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

