மலேசியாவில் உள்ள கல்லறைத்தோட்டம் ஒன்றில் ஏழு ‘மாடல்’ பெண்கள் திருமண நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம்வந்ததையடுத்து, மமிகுவீன் வெட்டிங் கௌச்சர் எனும் அந்த திருமண ஏற்பட்டு நிறுவனத்தின் முதலாளியான நூர் அமைரா முகமது அமிருதீனை சமூக ஊடகவாசிகள் வறுத்தெடுத்துவிட்டனர்.
இந்தத் தவறை ஒப்புக்கொண்ட நூர் அமைரா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருமண உடைகளில் இருந்த பெண்கள் முஸ்லிம்களல்லாதோரின் வெவ்வேறு கல்லறைகளின் மீது அமர்ந்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவற்றை நூர் அமைரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
ஜோகூரின் பத்து பஹாட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லறைத்தோட்டத்தில் அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக நூர் அமைரா மலாய் நாளிதழிடம் குறிப்பிட்டார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்து சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் மிகவும் கோபமான கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
கல்லறையைக் கிறிஸ்துவர்கள் புனிதமானதாகக் கருதுவதாக பயனாளர் ஒருவர் வெளியிட்ட கருத்துக்கு, சில முஸ்லிம்கள் தவறுசெய்தவர்களின் சார்பில் மன்னிப்புக் கோரியிருந்தனர்.
சுய விளம்பரத்துக்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று சிலர் கருத்துரைத்திருந்தனர்.
ஆனால், அந்தப் புகைப்படங்கள் சொந்த பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டவை என்றும் விளம்பரம் தேடுவதற்காக அல்ல என்றும் நூர் அமைரா குறிப்பிட்டார்.

