கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (47). இவரது உறவினருக்கு சொந்தமான நிலம் வடலூர் பகுதியில் உள்ளது.
அந்த நிலத்தை வரைமுறை படுத்துவதற்காக வடலூர் பேரூராட்சியில் மோகன்தாஸ் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சக்கரவர்த்தியை சந்தித்து கேட்டபோது, ‘’5 சென்ட் மனைக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும்’ என்று கேட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்தாஸ் இதுபற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து ஐடியாபடி, நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை மோகன்தாசிடம் கொடுத்து, அதை வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தியிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.
இதன்படி அவர் அந்த பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்து சக்கரவர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடமிருந்து மோகன்தாசால் வழங்கப்பட்ட ரூ. 25 ஆயிரம் பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தியை மேல் விசாரணைக்காக கடலூருக்கு அழைத்து சென்றனர்.
குறிஞ்சிப்பாடியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த சக்கரவர்த்தி கடந்த 2 மாதத்துக்கு முன்பு வடலூர் பேரூராட்சிக்கு பொறுப்பு செயல் அலுவலராக பதவியேற்றுக்கொண்டார்.

