மட்டக்களப்பு வவுனதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றபோது தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன முன்னணியினர் எச்சரித்து வந்த நிலையிலேயே படுகொலை இடம்பெற்று ஒருவருடமாகவுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் இந்த கொலையுடன் சம்பந்தப்படவில்லை என்று தெரிந்திருந்ததாக தற்போது கோட்டாபய ராஜபக்ச கூறியிருக்கின்றார்.
மட்டக்களப்பு – வவுனதீவு பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் நவம்பர் 29ஆம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படுகொலை இடம்பெற்றதன் பின்னர் இது தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் வெளியிடப்பட்டதோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.
இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக ஆரம்பித்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பின்னர் அவற்றை தலைமைதாங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமின் துப்பாக்கியினால் வவுனதீவு படுகொலை செய்யப்பட்டதாக விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் சிலாபம் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, வவுனதீவு படுகொலை விடுதலைப் புலிகளினால் நடத்தப்படவில்லை என்பதை அன்றே தாம் அறிந்திருந்ததாகக் கூறினார்.

